பாரம்பரியம் மிக்க மண்டபங்களை வணிக ரீதியாக பயன்படுத்த முடியாது - ஸ்ரீரங்கத்தில் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Update: 2021-05-06 03:43 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி செயல்படும் கடைகளை அகற்றும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, கடைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வசந்த ராயர் மண்டபம் பலத்த சேதத்திற்கு உள்ளானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை அகற்ற அரசு முடிவெடுத்தது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் அருகே உள்ள கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் கடை உரிமையாளர்கள் இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாரம்பரிய மதிப்புமிக்க கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் வணிக ரீதியான நடவடிக்கைகளை அனுமதித்தால் அதற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனால் கடை உரிமையாளர்கள் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி தலைமையிலான அமர்வு, "கோயிலுக்கு வெளியே ஒரு கி.மீ துாரத்தில் பிரதான சாலையில் தான் கடைகள் அமைந்துள்ளன என்பதால் கோயிலுக்கோ அல்லது பக்தர்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படாது" என்றும் பல தலைமுறைகளாக கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் தங்களை அங்கிருந்து அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் வாதிட்டதை நிராகரித்தது.

மேலும் கடை உரிமையாளர்களுக்கு ஒதுக்க கோவில் தரப்பில் மாற்று இடம் இல்லை என்ற நிலையில் மாற்று இடத்தை ஒதுக்கி தருமாறு கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது என்றும் 2018, டிசம்பர் இறுதிக்குள் கடைகளை காலி செய்வதாக உத்திரவாதம் அளித்ததன் படி கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மே 30க்குள் கடைகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் தவறினால் காவல் துறையினர் உதவியுடன் ‌அகற்ற அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Similar News