இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பயணிகள் இலங்கைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் கொரனோ தொற்று அதிகரித்ததால் பல நாடுகள் இந்திய பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று தங்களது நாட்டு குடிமக்களை அறிவுறுத்தியது. அதேபோல் இந்தியாவில் இருந்தும் பயணிகள் யாரும் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று பல உலக நாடுகள் அறிவித்திருந்தது.
ஐக்கிய அரபு அமீரகம் மே 14ஆம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவும் இந்தியாவிலிருந்து பயணிகள் யாரும் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்று தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியா இதற்கு ஒரு படி மேலே சென்று தங்கள் நாட்டிற்கு அனுமதி இல்லாமல் வரும் இந்திய பயணிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் பெரிய தொகை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது இலங்கை அரசும் இந்தியாவிலிருந்து பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. இதனால் தொழில் சம்பந்தமாக இந்தியா வந்தவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள கூடாது என்று கூறுவது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை பயணத்தை இந்தியர்கள் யாரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.