கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த இந்திய ராணுவம்!
இந்திய ராணுவம் சார்பாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தின் நேரடியான நடவடிக்கையின் மூலம் மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. இதன் மூலம் கொரோனாவிற்கு எதிராக போராடுபவர்களில் முதன்மையாக இந்திய ராணுவம் திகழ்ந்து வருகிறது.
இந்திய ராணுவம் தனது சொந்த படையினரின் பாதுகாப்பு, வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் உள்ளூர் நிர்வாகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் செய்து வருகிறது.
இதில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, அகமதாபாத், லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள 5 கொரோனா மருத்துவமனைகளுக்கு ராணுவம் உதவிகளை செய்து வருகிறது. ஆட்கள் மற்றும் பொருட்கள் உதவிகள் அளிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக தலைமை இயக்குனர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் கொரோனா மேலாண்மை பிரிவு ஒன்றை இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரிவு கொரோனா மேலாண்மை விவரங்களை ராணுவ துணை தளபதியிடம் நேரடியாக தெரிவிக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்திய ராணுவம் தங்களது பங்களிப்பை அளித்து வருகிறது. டெல்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் உள்ளூர் நிறுவனத்திற்கு உதவிகளை செய்து வரும் இந்திய ராணுவம் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வழங்குவது, முக்கிய மருந்து பொருட்களை எடுத்து செல்வது போன்ற உதவிகளை ஏற்கனவே செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
போர் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் இந்திய ராணுவம் தங்களது முழு பலத்தை காட்டுவது போல கொரோனா பேரிடர் காலத்திலும் இந்திய ராணுவம் தேசிய அளவிலான உதவிகளை செய்து வருகிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.