கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கோவில் நிலத்தில் சடலத்தை புதைத்து அபகரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்தக் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
இந்தக் கோவிலுக்குச் சொந்தமாக கடலூர்- விருத்தாச்சலம் பிரதான சாலையை ஒட்டிய எல்லப்பன்பேட்டை என்ற கிராமத்தில் 1.8 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு 'இது கோவில் இடம். அத்துமீறி நுழைபவர்கள் மீதும் அனுபவிக்க முயற்சிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறநிலையத் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை மதிக்காமல் சிலர் நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த நிலத்தை பொக்லைன் மூலம் சுத்தம் செய்து காணிக்கல் நட முயற்சிப்பதாக தெரியவந்ததை அடுத்து கோவில் செயல் அலுவலர் சம்பவ இடத்திற்குச் சென்றதும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் காணிக்கல் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அப்படியே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முன்னர் சென்ற மாதம் 30-ஆம் தேதி அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இறந்த ஒருவரின் உடலை கோவில் நிலத்தில் புதைத்ததாகவும் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் கூறியுள்ளார். எனவே மீண்டும் காணிக்கல் நட்டு நிலத்தை ஆக்கிரமிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.