இஸ்ரோவிலிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்த எம்.ஆர்.காந்தி - மாஸ் காட்டும் பாஜக எம்.எல்.ஏ!
நாகர்கோவில் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக இஸ்ரோ தலைவர் சிவனிடம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஆர்.காந்தி கேட்டுக் கொண்டதை அடுத்து உடனடியாக ஆக்சிஜன் தருவதாக உறுதி அளித்த இஸ்ரோ தலைவருக்கு எம்.ஆர்.காந்தி நன்றியை தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற நாளில் இருந்தே பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எம்.ஆர்.காந்தி கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து செய்து வருகிறார்.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து தொகுதியில் கொரோனா குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் வசதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடனடியாக நாகர்கோவிலுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் சிவனிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு இஸ்ரோ மகேந்திரகிரி நிறுவனம் உடனடியாக ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழி வகைகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்த இஸ்ரோ நிறுவனத்திற்கும் அதன் தலைவருக்கும் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக எம்.ஆர்.காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.