இரண்டாவது அலையிலிருந்து இந்தியா மீண்டு வர இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை- இஸ்ரேலில் ஒலித்த 'ஓம் நமச்சிவாய'!

Update: 2021-05-08 11:18 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல நட்பு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி உதவி வருகின்றன. மேலும் பல வகைகளில் இந்தியாவுக்கு உதவியும் இந்தியா விரைவில் இரண்டாவது அலையில் இருந்து மீண்டு வர பிரார்த்தனையும் செய்து வருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் இஸ்ரேலியர்கள் 'ஓம் நமச்சிவாய' என்று பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வழிபாடு செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் உள்ளவர்களே இந்துக்களின் பழக்க வழக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் கேலி செய்யும் நிலையில், பெரும்பாலும் யூத மதத்தைப் பின்பற்றும் இஸ்ரேலியர்கள் சர்வேஸ்வரனான ஈஸ்வரனின் நாமத்தை உச்சரித்து இந்தியா விரைவில் நல்ல நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்தது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இஸ்ரேலில் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்று ஒழிக்கப்பட்டு மாஸ்க் அணிவதில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு சில நாட்களுக்கு முன்பு தான் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தங்களது தேவைக்காக பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை இஸ்ரேல் அதிகம் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கு அனுப்பி வைத்து உதவியது.

சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலில் இருந்து ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் மற்றும் சுவாச உதவக் கருவிகள் உள்ளிட்டவை இந்தியா வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. "இந்தியா இஸ்ரேலின் மிக முக்கியமான மற்றும் நெருக்கமான நட்பு நாடுகளுள் ஒன்று. இந்த கடினமான சூழலில் இந்தியாவுக்கு தோள் கொடுத்து உயிர் காக்கும் கருவிகளை இந்திய சகோதர, சகோதரிகளுக்கு அனுப்பி வருகிறோம்." என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Similar News