ஆக்கிரமிப்பு செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுக்கும் தி.மு.க. நிர்வாகி-திருப்பத்தூரில் பரபரப்பு!

Update: 2021-05-09 01:15 GMT

திருப்பத்தூரில் லயன்ஸ் கிளப் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க நிர்வாகி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.





திருப்பத்தூரில் ஈக்கா மைதானம் அருகில் லயன்ஸ் கிளப் அறக்கட்டளை அலுவலகம் ஒன்று வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் என்பவருடைய திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக ஜெனரேட்டர் ஒன்று இந்த அலுவலகம் அருகில் வைக்கப்பட்டது.

இதனால் லயன்ஸ் கிளப் அறக்கட்டளை அலுவலகத்தின் முகப்பு மறைக்கப்பட்டு அலுவலகத்திற்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ராஜேந்திரனை தொடர்புகொண்டு ஜெனரேட்டரை அப்புறப்படுத்தும்படி கேட்டுக்கொண்டதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மாறாக தி.மு.க. நிர்வாகியிடம் இருந்து கொலை மிரட்டல் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளுக்கு வந்ததுள்ளது. எனவே லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் அத்துமீறி வைக்கப்பட்ட ஜெனரேட்டரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தி.மு.க. நிர்வாகி ஒருவர் லயன்ஸ் கிளப் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அப்புறப்படுத்த வலியுறுத்திய அதிகாரிகளை கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் இதுபோன்ற மிரட்டலுக்கு பயப்படாமல் காவல்துறையிடம் வந்து புகார் அளித்தால் காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News