திருப்பதி தேவஸ்தான பிரசாதத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Update: 2021-05-10 01:30 GMT

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் வேத பண்டிதர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வருகை தந்து அவருக்கு பிரசாதங்களை வழங்கினர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 13வது முதலமைச்சராக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் வேத பண்டிதர்கள் ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று திருப்பதி தேவஸ்தான பிரசாதங்களை வழங்கினர்.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவியார் துர்கா ஸ்டாலினிடம் திருப்பதி தேவஸ்தான பிரசாதங்களை வழங்கி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை கடவுள் மறுப்பாக இருந்தாலும் திமுகவின் முக்கியத் தலைவர்கள் கூட ஆன்மீக நம்பிக்கை இருப்பதால் அவர்கள் அவ்வப்போது கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடவுள் பக்தி அதிகம் கொண்ட துர்கா ஸ்டாலின் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவும் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்கு முன்னர் கோவிலுக்கு சென்று வழிபட்டதும் குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலும் வருங்காலங்களில் இந்துக்களின் மனம் புண்படும் படியான வார்த்தைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் அதன் கூட்டணி கட்சியினரும் தவிர்ப்பார்கள் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Similar News