கோவைக்கு ஆக்சிஜன் கிடைக்க தொடர்ந்து முயற்சி - மத்திய அமைச்சர்களுக்கு வானதி சீனிவாசன் கடிதம்!
தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ சங்கம் சார்பாக கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மட்டும் 40MT மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
இதனால் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்துவரும் ஆக்சிஜன் அளவை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் கோவை மாவட்டத்திற்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் மத்திய எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் சேலம் செய்ல் நிறுவனத்தில்(SAIL) கையிருப்பில் இருந்த 200 MT ஆக்சிஜனை தமிழக அரசுக்கு ஏற்கனவே அளித்துள்ளதாகவும் ஆனால் தற்போது சில தொழில்நுட்ப பிரச்சனையினால் அங்கு ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டு உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்து ஆக்சிஜன் வழங்குவதை உறுதி படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் தமிழகத்திற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மத்திய அரசிடம் ஆக்சிஜன் தேவையை எடுத்துக் கூறி தங்கள் தொகுதி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.