தற்போது புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர்-ஜல்ஜீவன் தகவல்!

Update: 2021-05-12 01:00 GMT

அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ள மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது என்று ஜல்ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


2024 ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறத்தில் இருக்கும் அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது ஜல்ஜீவன் இத்திட்டத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கோவா, தெலுங்கானா மற்றும் அந்தமான் நிக்கோபார் மாநிலங்கள் அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியுள்ளது.

இதன் வரிசையில் தற்போது நான்காவதாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் இணைந்துள்ளதாக ஜல்ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் தேர்தல் காரணமாக இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்ட போதிலும் புதுச்சேரி அரசின் முயற்சியால் இந்த நிலை எட்டபட்டதற்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதாக ஜல் ஜீவன் அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.





தற்போது புதுச்சேரியில் இருக்கும் 1.16 லட்சம் கிராம வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி முன்கூட்டியே இந்த சாதனையை எட்டியுள்ளதாக ஜல்ஜீவன் அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்தப்படுத்தி மீண்டும் உபயோகிப்பதற்கான திட்டத்தில் புதுச்சேரி பணியாற்றி வருகிறது.

நீர்வள நிலைத்தன்மையை நோக்கி புதுச்சேரி தீவிரமாக பணியாற்றி வருவதாக ஜல்ஜீவன் அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு இல்லாத கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் பல மைல்கள் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை 2024 ஆம் ஆண்டிற்குள் போக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News