கள்ளச்சந்தையில் மருந்து பொருட்களை விலை அதிகமாக விற்றால் குண்டர் சட்டம் பாயும்!

Update: 2021-05-15 11:45 GMT

கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.







இதுகுறித்து தமிழக அரசு சார்பாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ளச் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதேபோல் மக்களின் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகளும் வருகிறது. பேரிடர் காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடுபவது கடுமையான குற்றமாகும்.

இது போல் மருந்து பொருட்களை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்தை 3500 ரூபாய்க்கு பெற்று அதனை 40,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதனை மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்து விநியோகஸ்தர்கள் போன்றவர்களே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி கள்ளச்சந்தையில் மருந்து பொருள்கள் விற்கப்படுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் உயிருக்காக போராடி வரும் நிலையில் இதுபோன்ற ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை நசுக்கி எறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News