கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவையில் புதிய சேவையை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்!
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் நடமாடும் ஆவிபிடிக்கும் இயந்திரத்தின் சேவையை தொடங்கி வைத்தார். இதனை தொடங்கி வைத்த முதல் நாளான இன்று முன் களப்பணியாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக கோவையில் பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இன்று கோவை மக்கள் ஆவி பிடிப்பதற்கு வசதியாக நடமாடும் ஆவி பிடிக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனத்தில் சேவையை வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த சேவை தொடங்கப்பட்ட முதல் நாளான இன்று முன் களப்பணியாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை வானதி சீனிவாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.