முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்த வானதி சீனிவாசன் - என்னென்ன கோரிக்கை?

Update: 2021-05-20 14:25 GMT

கோவையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொரோனா நிவாரண பணிகளுக்காக கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.

கோவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கொரோனா நிவாரண பணிகள் குறித்த முக்கிய கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் வழங்கினார். அவர் தனது மனுவில் "கோவை மாவட்டத்தில் தினப்படி தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி செல்கிறது. இது தற்போது இருக்கும் சுகாதார கட்டமைப்பு மீது மிகப்பெரிய அழுத்தத்தையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் கட்டமைப்பின் திறனையும் தாண்டி அதிகப்படியாக சேவை செய்கிறார்கள். ஆனாலும் நோய் தொற்று உள்ளவர்களின் அதீத எண்ணிக்கையால் மருத்துவ சேவையை மறுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதோடு நோய் முற்றியவர்களுக்கு கொடுப்பதற்கான ஆக்சிஜன் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் உற்பத்தியும் ஆக்ஸிஜன் இருப்பும் போதுமானதாக இல்லாததால் பலர் உயிரிழக்கிறார்கள்."

"இந்த அசாதாரணமான சூழலில் 50க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் பிணக்கிடங்குகளில் இரண்டு நாட்களுக்கு மேலாக வைக்கப்பட்டிருக்கிறது. தங்கள் பெற்றோர், உற்றார், உறவினர்களை இழந்த மக்கள் வேதனையுடன் குடும்பத்தோடும் பிணவறல வாசலில் கண்ணீரோடும் செய்வதறியாது கையறு நிலையில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்."

"தாமதமின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் இறுதி மரியாதைக்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அசாதாரண சூழலை கணக்கில் கொண்டு உடனடியாக முன்மாதிரியான மருத்துவமனையான கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிகப்படியான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கப்பட வேண்டும்."

"நோய் அறியும் சோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அங்கு நோய்த்தொற்றை அதி விரைவாக தெரியப்படுத்த வேண்டும். அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு குறிப்பிட்ட படுக்கைகளை தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்ற வேண்டும். இதை ஆரம்பநிலை நோய் தொற்று உள்ளவர்கள், குறைவாக தொற்று உள்ளவர்களுக்கு சேவை செய்ய உபயோகிக்கலாம்."

"மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளில் எண்ணிக்கையை கூட்ட வேண்டும். ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும் இருப்பில் உள்ள படுக்கை வசதி ஆக்சிஜன் வசதி மற்றும் வென்டிலேட்டர் இணைந்த படுக்கை வசதிகள் எண்ணிக்கையை அனைவரும் அறியும் வகையில் அறிவிக்க வேண்டும்."

மேலும், "உள்ளூர் செய்தி நிறுவனங்கள், தேசிய ஊடகங்கள், எப்எம் வானொலிகள், மூலம் படுக்கை வசதிகள், நோயறியும் மையங்கள், தடுப்பூசி மையங்கள் பற்றிய அறிவிப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்" என்று தனது கோரிக்கை மனுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் வேதனைகளையும் முடிந்த அளவு குறைக்க இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வானதி சீனிவாசன் மனுவாக அளித்தார்.

Similar News