கோவில்களின் அசையும், அசையாச் சொத்துக்களை ஆவணப்படுத்தி ஆன்லைனில் பதிவேற்றம்- கலக்கும் புதுச்சேரி!
தமிழகத்தில் இப்போது தான் கோவில் சொத்துக்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அறநிலையத் துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் புதுச்சேரியில் 243 கோவில்களின் விவரங்களை ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு அதை இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.
வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களையும் பட்டியலிடும் இந்த இணையதளத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள 243 கோவில்கள் மற்றும் மடங்களின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம், பூஜைகள், விழாக்கள், நன்கொடை, கோவிலில் பின்பற்றப்படும் விதிகள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். http://hri.py.gov.in என்ற முகவரியில் இந்த இணையதளம் இயங்குகிறது.
இது புதுச்சேரியில் ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கவும் அதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று கூறிய ஆளுநர் தமிழிசை, இணையதளத்தை உருவாக்க உதவிய தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்துக்கு நன்றி தெரிவித்தார்.
அதே போல் கோவில்களின் வரவு, செலவு குறித்த தகவல்களும் இடம்பெறும். இதனால் கோவில்களின் நிர்வாகம் நேர்மையாக நடக்கிறதா என்று அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இது போக கோவில்களில் புனரமைப்பு பணிகள் நடப்பதை மக்கள் ஆன்லைனில் பார்வையிடவும், அன்னதானம் உள்ளிட்ட சேவைகளுக்கு நன்கொடை அளிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து கோவில்களும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த சேவைகளை ஒரே இடத்தில் எளிமையான முறையில் பயன்படுத்த முடியும். கோவில் தினப்படி பூஜைகள், திருவிழாக்கள், உற்சவங்களை ஆன்லைனில் கண்டு களிக்கவும் வசதி உண்டு.
Source: https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/19/now-single-online-gateway-for-243-temples-launched-in-puducherry-2304733.amp?__twitter_impression=true