கொரோனா தொற்று பரவுகிறது என்ற வதந்தியால் தாக்கப்படும் செல்போன் டவர்கள் - அதிரடி உத்தரவு!
5G மொபைல் டவர் மூலம் கொரோனா தொற்று ஏற்படுகிறது என்ற வதந்தியை நம்பி ஹரியானா மாநிலத்தில் உள்ள செல்போன் டவர்களை மர்ம நபர்கள் தாக்கி வரும் நிலையில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியானாவின் தலைமைச் செயலாளர் விஜய் வர்தன் பிறப்பித்த உத்தரவில் " மாநிலத்தில் அதிகரித்து வரும்கொரோனா தொற்றுக்கு சோதனைக்காக அமைக்கப்பட்ட 5G செல்போன் டவர்கள் தான் காரணம் என்று மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் வானொலி அலைகள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் வழியாக பயணிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பிற அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5G நெட்வொர்க் தொழில்நுட்பத்தை கொரோனா தொற்றுநோயுடன் இணைப்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆதாரமும் இல்லை என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் 5G நெட்வொர்க்கின் சோதனை இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை" என்று ஹரியானா தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதன் மூலமாக கிராமத்தில் இருக்கும் 10 முதல் 15 செல்போன் டவர்கள் தாக்கப்படும் அபாயம் இருப்பதால் அவற்றை பாதுகாக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5G தொழில்நுட்ப சேவை இந்தியாவில் இன்னும் தொடங்கப்படாத நிலையில் செல்போன் டவர் மூலம் கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால் செல்போன் டவர்கள் தாக்கப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.