பசுக்களை திருடிச்சென்று வெட்டி விற்ற இளைஞர்கள் - கதறி அழுத கிராமத்தினர்!
வேலூர் அருகே இரண்டு கர்ப்பிணி பசுக்களை இறைச்சிக்காக திருடிச்சென்று அதன் தலையை வெட்டி வீசி எறிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பசுக்களின் தலை மற்றும் கால்களை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர்பட்டியை சேர்ந்த அரி என்பவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அந்த இரண்டு பசு மாடுகளில் ஒரு பசுமாடு ஆறுமாத கர்ப்பிணியாகவும், மற்றொன்று 7 மாத கர்ப்பிணியாகவும் இருந்து வந்துள்ளது. இன்னிலையில் 2 மாடுகளையும் நேற்று காலை முதல் காணவில்லை என்று அரி மற்றும் அவருடைய உறவினர்கள் தேடியுள்ளனர். கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழையினால் சாலை அருகே ஈரம் இருந்ததால் மாட்டின் கால்தடம் இருந்துள்ளது.
மாட்டின் கால் தடத்தை பின்தொடர்ந்து சென்ற போது காயிதே மில்லத் நகர் வரை பசுவின் கால் தடம் இருந்துள்ளது. அந்தப் பகுதியிலிருந்து சற்று தொலைவில் அந்த மாடுகளில் தலை மற்றும் கால் பகுதிகள் கிடந்துள்ளது. அந்தப் பகுதியில் மாட்டு இறைச்சி விற்கப்படுவதால் அந்த இரண்டு பசு மாடுகளும் இறைச்சிக்காக திருடி வந்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அரி மற்றும் அவரது உறவினர்கள் பசுவின் தலை மற்றும் கால்களை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணிகளாக இருந்த இரண்டு பசுமாடுகள் கொல்லப்பட்டதை நினைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த முபாரக் அலி என்பவர் இறைச்சிக்காக பசுமாடுகளை திருடி அவருடைய அண்ணன் ரபீக் என்பவர் இறைச்சிக் கடையில் பசுவை வெட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முபாரக் அலியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் அவருடைய அண்ணன் ரபீக்கை வலைவீசி தேடி வருகின்றனர். கர்ப்பிணியாக இருந்த இரண்டு பசுக்களை இறைச்சிக்காக திருடி சென்று வெட்டி அதன் தலை மற்றும் கால்களை வீசி சென்ற சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.