படுக்கை, ஆக்சிஜன் கிடைக்காமல் திண்டாடும் மக்கள் - தி.மு.க-வினரின் திறப்பு விழா கொண்டாட்டத்தால் வேதனை!
திருச்சியில் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கூடியதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதோடு ஊரடங்கு விதிகளை ஆளும் கட்சியினரே மீறியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியாதால் தி.மு.க-வினர் திரளானோர் அங்கு கூடினர். அதில் பெரும்பாலானோர் தங்கள் முகம் அமைச்சருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக முக கவசம் அணியாமலும், எப்படியாவது அமைச்சரை பக்கத்தில் சென்று பார்த்து விட வேண்டும் என்று சமூக இடைவெளி இல்லாமலும் சுற்றித் திரிந்தனர்.
மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவன் பெரம்பலூரில் வசித்து வருவதால் கொரோனா வைரஸ் பரவும் இச்சூழலில் மக்களைச் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்பதற்காக இங்கு அலுவலகத்தை திறந்ததாகவும், புதன் கிழமை பௌர்ணமி தினம் என்பதாலும் இந்த நாளை விட்டால் அடுத்த இரண்டு வாரத்திற்கு நல்ல நாள் எதுவும் இல்லை என்பதாலும் அன்றைய தினமே திறந்து விட வேண்டும் என்பதற்காக நேற்று அலுவலக திறப்பு விழாவை வைத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர் பரவல் காரணமாக குறைவான நபர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சர் விழாவில் பங்கேற்றதால் அவரை பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் அங்கு கூடி விட்டனர் என்றும் கூட்டம் கூடியதற்கு எம்எல்ஏ காரணம் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் அதிகமாக பரவி, பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமலும், படுக்கை கிடைத்தாலும் ஆக்சிடெண்ட் கிடைக்காமலும் அல்லாடி வரும் இந்த காலகட்டத்தில் இது போன்று திறப்பு விழாக்கள் நடத்துவது அநாகரிகமாக இல்லையா என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நன்றி : தினமலர்