சென்ட்ரல் விஸ்டாவுக்கு தடை கோரிய வழக்கு - தள்ளுபடி + அபராதம் நீதிமன்றம் அதிரடி!
புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதை சுற்றி அமைய உள்ள அரசு அலுவலகங்கள், பிரதமர் இல்லம் ஆகியவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா கட்டுமான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டுமான பணியை நிறுத்த முடியாது என்று கூறியதுடன் பொதுநலத்துடன் மனுதாரர் வழக்கு தொடரவில்லை என்று கூறி மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதத்தையும் விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அதைச்சுற்றி அமைக்கப்படும் அரசு அலுவலங்கள், பிரதமர் இல்லம் ஆகியவை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியமா என்று எதிர்க்கட்சிகளும் 'தன்னார்வ' அமைப்புக்களும் விமர்சித்து வருகின்றன. சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் கட்டுமான பணிகளை கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்குவதற்கான வசதி, கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த தகவல்கள் அனைத்தும் பொதுத்தளத்தில் இருந்து வருவதால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தியாவசியமானது என்றும், இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் நவம்பர் 2021-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர் பொதுநல நோக்கத்துடன் வழக்கை தொடரவில்லை என்பதால் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.