சிறு வியாபாரிகள் விற்பனை செய்த காய்கறிகள் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டி அராஜகம்! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Update: 2021-06-01 07:09 GMT

தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் அமலில் இருக்கும் நிலையில் காய்கறி கடைகள் நடத்தக் கூடாது என்றூ கோவில் அருகே சிறு வியாபாரிகளின் காய்கறி கடையின் மீது ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தலைமையில் வந்த கும்பல் காய்கறிகள் மீது ப்ளீச்சிங் பவுடர் தூவி நாசம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஸ்ரீகாளிகாபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. தற்போது வார சந்தை நடத்த அனுமதி இல்லாத நிலையில் நேற்று முன்தினம் மாலை செல்லாத்தம்மன் கோவில் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிறு வியாபாரிகள் காய்கறி கடையை ரகசியமாக நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தலைமையிலான கும்பல் காய்கறிகள் மீது பிளீச்சிங் பவுடரை கொட்டி காய்கறிகளை நாசம் செய்து உள்ளனர்.

இதனால் அங்கே காய்கறி கடை வைத்திருந்த சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். "காய்கறி கடை இங்கு போடக்கூடாது என்று கூறியிருந்தால் நாங்கள் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று இருப்போம். ஆனால் பாடுபட்டு விளைவித்த காய்கறிகளை இப்படி பிளீச்சிங் பவுடர் போட்டு நாசம் செய்து விட்டனர்" என்று புலம்பி அழுதனர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், காய்கறி விற்பனை, நடமாடும் வாகனங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சாலையோர கடைகள் நடத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் சாலையோர கடைகளில் விற்கப்பட்ட காய்கறிகள் மீது பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மளிகை கடைக்கு வெளியே தள்ளு வண்டியில் வைத்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில் தள்ளு வண்டிகள் இல்லாமல் இருப்பதால் வியாபாரிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அவ்வாறு தள்ளுவண்டியில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

Source: தினமலர்.

Similar News