டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை உறுதி!

Update: 2021-06-01 15:26 GMT

இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் 30 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில நாட்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமாகி வீடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது வரை நாடு முழுவதும் 21.6 கோடி மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் 1.67 கோடி பேர் சுகாதார பணியாளர்கள் என்றும், 2.42 கோடி பேர் முன்கள பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 15.48 கோடி பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 2.03 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Source : Dinamalar 

Similar News