தென்காசி அருகே அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!
தென்காசி அருகே கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை தேரடி தெருவில் முப்பிடாதி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வரும் இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த கோவிலுக்கு சொந்தமாக கோவிலுக்கு உள்ளே ஒரு உண்டியலும், கோவிலுக்கு வெளியே ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இந்த கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த சுமார் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மறுநாள் காலை கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கோவில் உண்டியல் திருட்டு தொடர்பாக அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். கோவிலில் உள்ள சிலைகள், புஜை பொருள்கள் மற்றும் உண்டியல்களை பாதுகாப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : Malaimalar