மண்டைக்காடு கோவில் தீ விபத்துக்கு அறநிலையத்துறையே காரணம் - எல்.முருகன் காட்டம்!
அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் கேரள நம்பூதிரிகளைக் கொண்டு பரிகார பூஜைகள் செய்து தங்கத்தாலான மேற்கூரை அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் புதன்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கோவிலின் அம்மன் சன்னதி கருவறையின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று கோவிலுக்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அங்கு தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தீ விபத்தால் சேதமடைந்த அம்மன் சன்னதியின் மேற்கூரையை தங்கத்தால் அமைக்க வேண்டும் என்றும் ஆகம விதிகளின்படி கேர நம்பூதிரி களை வைத்து பிரசன்னம் பார்த்து பரிகார பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தீ விபத்து தொடர்பான விசாரணையை மக்களிடம் மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.