இராணுவ உளவுத்துறை (எம்ஐ) மற்றும் மாநகர காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் காரணமாக சட்டவிரோதமாக ஆறு டெலிபோன் எக்சேஞ்ச்களை நடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய ராணுவ தகவல் பரிமாற்றங்களையும், இந்திய ராணுவ அதிகாரிகளையும் குறிவைத்து தகவல் சேகரிப்பதற்காக இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சை சட்டவிரோதமாக நடத்தி வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவின் மலப்புரம் நகரைச் சேர்ந்த இப்ராஹிம்.எம்.புல்லட்டி(36) என்பவர் மீதும் தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த அவரது கூட்டாளியான கௌதம்(27) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பெங்களூருவில் BTM லே அவுட் பகுதியில் வசித்து வந்தனர். BTM லேஅவுட் பகுதியில் உள்ள ஆறு இடங்களில் ஒவ்வொன்றிலும் சட்டவிரோத பரிமாற்றத்திற்காக இருவரும் தலா 32 சிம் கார்டுகளுடன் 30 மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
அவர்கள் சட்டவிரோதமாக சர்வதேச தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி மற்றும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். பெரும்பாலான அழைப்புகள் துபாய் நாட்டுக்கு மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல வாரங்களாக இவர்கள் நடத்தி வந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சை ஆராய்ந்த காவல்துறையினர் சந்தேக நபர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் அந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இது ஒரு சட்டவிரோத நெட்வொர்க் என்று நம்பப்பட்டதைப் பற்றிய குறிப்பு முதலில் கிழக்கு பகுதியில் இருந்து வந்ததாகவும் அவர்கள் சட்டவிரோதமாக தகவல்களை சேகரிக்க இந்திய இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பணியாளர்களை குறிவைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
பிறகு அவர்கள் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்ததைத் தொடர்ந்து பெங்களூரு காவல்துறையினர் மற்றும் ராணுவ உளவுத்துறையினர் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டிடம் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக இராணுவ பரிமாற்றங்களை சேகரித்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : TOI