தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாஜகவினர் அவரவர் வீட்டின் வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் போது ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த கரு.நாகராஜன் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
அதில், கொரோனா ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் நாளை முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கடந்த ஆட்சியின்போது டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திமுக அரசு எடுத்துள்ளது அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்று பாஜகவினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் கலந்து கொள்வார்கள் என்றும் கமலாலயம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.