தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மின்வெட்டு இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த போதிலும் தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னை மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னையில் மாலை நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படும் என்ற கருத்து மக்களிடையே இருக்கும் நிலையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அறிவிக்கப்படாத மின்வெட்டு மீது கவனம் செலுத்தி தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் கொரொனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.