தமிழக பா.ஜ.க பிரமுகரின் அலுவலகத்தில் ரசாயனத்தை பயன்படுத்தி தீ வைப்பு? ஆணையரிடம் புகார்!

Update: 2021-06-16 01:30 GMT

ரசாயனத்தை பயன்படுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் அலுவலகத்தில் தீ வைத்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் வழக்கறிஞர் பிரிவில் இருந்து‌ வருகிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து வந்த அவர் சென்னை உயர் நீதிமன்றம் அருகே இருக்கும் தனது அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது அஸ்வத்தாமன் அலுவலகம் முற்றிலும் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதனை புகைப்படம் எடுத்து அஸ்வத்தாமன் ட்விட்டரில் பதிவிட்டார்.


அவர் அலுவலகத்தில் தீ பிடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கரு.நாகராஜன் மற்றும் பால்.கனகராஜ் ஆகியோர் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பேசிய கரு நாகராஜன், ரசாயனத்தை பயன்படுத்தி தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தனர்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை இதுபோன்று மிரட்டலாம், பயமுறுத்தலாம் என்ற திமுகவின் இந்த செயல் சட்டத்திற்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார் என்று கிஷோர்.கே.ஸ்வாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Similar News