மாயமான கோவில் சிலைகள் மற்றும் நகைகள்? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மாயமான கோவில் சிலைகள் மற்றும் சுவாமி நகைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு என்று அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுநல மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள், சிலைகள் மற்றும் நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு மாயமாகி விட்டதாகவும், இதனால் கோவில் சிலைகள் நகைகள் பற்றிய தகவல் தெரியாத நிலையில் அவற்றை மீட்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காவல்துறை விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தனது மனுவில் கூறியுள்ளார். இது குறித்த வழக்கில் முன்னாள் அறநிலை துறை தாக்கல் செய்த அறிக்கையில் சிலைகள் நகைகள் காணாமல் போகவில்லை எனக்கூறி திருட்டுகள் மறைக்கப்பட்டதாகவும் தற்போது ஆட்சி மற்றும் அதிகார மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அறநிலையத்துறை ஆணையருக்கு கோவில் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் சிலைகள் நகைகள் மாயமானது குறித்து அளிக்கப்பட்ட மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிலைகள் நகைகள் எங்கிருந்து காணாமல் போயின என்பதை கண்டறிந்து இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில் எடுத்துள்ள நிலைப்பாட்டை அறநிலையத்துறை மறுபரிசீலனை செய்து புதிதாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.