கொத்துக் கொத்தாக பழங்குடியின மாணவர்களின் கல்லறைகள் - போப் மன்னிப்பு கேட்க கனடா பிரதமர் வலியுறுத்தல்!
கனடாவில் 29ஆம் நூற்றாண்டில் பழங்குடி மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததற்காகவும் அவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளதற்கு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் போலவே கனடாவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது பழங்குடியின மாணவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், பிரெஸ்படேரியன், பிராட்டஸ்டன்ட் என அனைத்து வகையான கிறிஸ்தவ மிஷினரிகளும் ஈடுபட்டு வந்துள்ளன. கனடாவில் பழங்குடிகள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களுக்காக உறைவிடப்பள்ளி முறையை பிரிட்டிஷ் நிர்வாகம் கனடாவில் கொண்டு வந்தது. அப்பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து கட்டாயப்படுத்தி அந்த பள்ளியில் சேர்த்து அவர்களை கட்டாய மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1.5லட்சம் பழங்குடியின மாணவர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதை அனைத்தையும் ரோமன் கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியை பேசியதற்காக தாக்கப்பட்டதாகவும், உடல் மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு அதிகம் ஆளாகி உள்ளதாகவும் கனடா அரசு ஒப்புக் கொண்டிருக்கின்றது. இந்த பள்ளியில் பயின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோய் மற்றும் மர்மமான முறையில் இறந்து உள்ளதாகவும் தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்பள்ளிகள் 1899 முதல் 1997 வரை இயங்கியுள்ளன. கடந்த மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கிறிஸ்தவ உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் ரேடார் மூலமான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கொடூர படுகொலையை கலாச்சார படுகொலை என்று கனடா பழங்குடியின தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்ற கருத்தை வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்கள் குழந்தைகள் மீதான இத்தாக்குதலுக்கு கனடாவிற்கு நேரில் வந்து அவர்களிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இதன் முக்கியத்துவம் தொடர்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரான்சிஸ் அதற்கு வேதனை தெரிவித்திருந்தார். ஆனால் பழங்குடியின மாணவர்கள் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச் நிர்வாகத்தின் பங்கிற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.