தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால் கோவில்களை சுத்தம் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியதும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் கோவில் பணியாளர்கள் மூலம் பூஜைகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அனுமதி அளித்த அரசு கோவிலை திறக்க அனுமதி அளிக்காததால் தினமும் கோவிலுக்கு சென்று வழிபடும் பக்தர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களும் நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியது. ஆனால் கோவில்களில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவில்கள் விரைவில் திறக்கப்பட்டு கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.