சென்னையில் 'சூது கவ்வும்' பட பாணியில் தந்தையிடமே பணம் பிடுங்க முயற்சித்த மகன்!

Update: 2021-07-10 06:30 GMT

தந்தையிடம் பத்து லட்சம் ரூபாய் பறிக்க, நண்பருடன் கடத்தல் நாடகம் நடத்திய இளைஞர் கைதானார்.

சென்னை அம்பத்துார், கிருஷ்ணாபுரம், உசேன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன், 68; வழக்கறிஞர். அவரது மனைவி உமா. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் வீட்டு மாடியில், உமாவின் தங்கை மகன் சண்முகம், 35, கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருக்கிறார்.

8ம் தேதி காலை சண்முகத்தை காணவில்லை. மதுபோதையில் அன்று மதியம் 1:20 மணிக்கு சண்முகத்தின் மொபைல் போனிலிருந்து, வேறொரு நபர், ராஜேஸ்வரனிடம் பேசினார். சண்முகத்தை கடத்திவிட்டதாகவும், அவரை விடுவிக்க 10 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார்.

இது குறித்து, ராஜேஸ்வரன், சண்முகத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். நேற்று காலை வரை, சண்முகம் வீட்டிற்கு வராததால், ராஜேஸ்வரன், அம்பத்துார் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சண்முகம், 35; அவரது நண்பர் ரவிக்குமாருடன், 35 என்பவருடன் வண்டலுாரில் உள்ள விடுதி ஒன்றில், மதுபோதையில் கிடந்தது தெரிய வந்தது. அவர்களை நேற்று மதியம் அம்பத்துாருக்கு அழைத்து வந்து கடத்தல் குறித்து விசாரித்தனர்.

சண்முகத்திற்கு சரியான வேலை இல்லாததால், மது உள்ளிட்ட ஆடம்பர செலவுகளுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனது தந்தை ராமசாமியிடம் இருந்து பணம் பறிக்க, நண்பர் ரவியுடன் சேர்ந்து, கடத்தல் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார். போலீசார், நேற்று மாலை இருவரையும் கைது செய்தனர்

Similar News