பாகிஸ்தானில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்த விகாரம் கண்டுபிடிப்பு!
பாகிஸ்தானின் வடமேற்கு பள்ளத்தாக்கின் 'ஸ்வாட்' பகுதியில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த விகாரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புத்த விகாரம், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது புத்தர் உடலைவிட்டு பிரிந்த 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விகாரம் எழுந்திருக்கும் என்பது தெரிகிறது.
இரண்டு அடுக்குகளாக இந்த புத்த விகாரம் அமைந்துள்ளது. அதாவது மேலே எழும்பியிருக்கும் அடுக்கு, கீழே இருந்த அடுக்கு அழிந்த பின்னர் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இவ்விகாரத்தின் சிறப்பம்சங்களாக, எல்லா புத்த விகாரங்களில் இருப்பது போன்ற இரண்டு ஸ்தூபாக்களும், புத்த துறவிகளுக்கான அறை ஒன்றும், வெளியாட்கள் வந்து சந்திப்பதற்கான ஒரு சிறிய அறை ஒன்றும். சடங்குகள் செய்வதற்கான ஒரு அகண்ட அறை ஒன்றும் அந்த விவகாரத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதே இடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள், அச்சுகள் மற்றும் பானைகள் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளனர். வரலாற்று கூற்றுப்படி "இந்த விகாரம் மூன்றாம் நூற்றாண்டில் ஒரு நிலநடுக்கத்தின் போது அழிந்திருக்க வாய்ப்புண்டு" என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.