"தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் பார்க்க வேண்டும்" - தமிழர்களுக்காக இலங்கையில் குரல் கொடுக்கும் அண்ணாமலை
இலங்கைக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பல முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்வுநிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை மலையகத்திலுள்ள 'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களை அழைத்ததை தொடர்ந்து, அண்ணாமலை அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
பல்வேறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை அண்ணாமலை சந்தித்து வருகிறார். மேலும் கடந்த 23ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, யாழ்ப்பான சிறைக்குச் சென்று சந்தித்தார். அவர்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் "தமிழக மீனவர்கள் தவறிதான் தான் வருகிறார்களே தவிர, வேண்டுமென்றே யாரும் வருவதில்லை. இருநாட்டு மீனவர்களை மனிதாபிமான முறையில் பார்க்க வேண்டும். குற்றம் செய்தவர்களாக பார்க்கக்கூடாது. இதுவே எங்களது தாழ்மையான கருத்து." என்று அண்ணாமலை கூறினார்.
மேலும் இதுகுறித்து அண்ணாமலை தன் டுவிட்டர் பதிவில் " இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று யாழ்ப்பாண சிறையில் நான் இன்று சந்தித்தேன். தமிழக பா.ஜ.க சார்பாக அவர்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்டுகளை வழங்கினோம். நமது இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விரைவில் நமது தமிழக மண்ணிற்கு வந்து அடைவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.