மாதம் 100 கோடி ரூபாய் மாமூல் கேட்ட அமைச்சர் ராஜினாமா - சிபிஐ விசாரணை ஆரம்பம்!
மாதம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தர வேண்டும் என்று காவல்துறை அதிகாரியை வற்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனில் தேஷ்முக். இவர் மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங்கிடம் மாதம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரவேண்டும் என்று வற்புறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக மும்பையில் இருக்கும் பார்கள் மற்றும் ஹோட்டல்களில் 40 கோடி முதல் 50 கோடி வரை வசூலிக்குமாறு அமைச்சர் தன்னை கட்டாயப்படுத்தியதாக முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் புகார் கடிதம் ஒன்றை முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் அனுப்பினார். இந்த புகார் கடிதம் தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அனில் தேஷ்முக் மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 15 நாட்களில் சிபிஐ விசாரணை தொடங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இன்று வழங்கினார். அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏற்றுக்கொண்டார். உள்துறை அமைச்சரே ஊழல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.