மே 2 பொதுக்கூட்டங்களுக்கு தடை - தேர்தல் ஆணையம்!

Update: 2021-04-27 07:49 GMT

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சார்பாக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றாத காரணத்தினால் தற்போது இந்தியாவில் நோய்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. எனவே கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கண்டனம் ஒன்றை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வேட்பாளர்கள் சார்பாக யாரும் கொண்டாட்டத்தில் ஈடுபட கூடாது என்றும் வெற்றி பெற்ற வேட்பாளர் அதற்கான சான்றிதழை வாங்க வரும்போது கூட்டமாக வரக்கூடாது என்றும், இருவர் மட்டுமே வந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களை நேரில் சென்று சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதேபோல் வெற்றி கொண்டாட்டங்களுக்காக கூட்டங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் காரணமாக தான் தற்போது இந்தியாவில் நோய்த்தொற்று அதிகமாக பரவி உள்ளது என்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் மே2ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News