அயோத்தியில் ₹400 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம் - மாநில அமைச்சரவை ஒப்புதல்!
அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ₹400 கோடி மதிப்புள்ள உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம் அயோத்தியில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து ராமர் கோவிலுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. அங்கு ராமர் கோவில் கட்டி முடித்தவுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராம பக்தர்கள் அங்கு தரிசனம் செய்வதற்காக வர உள்ளனர். அவர்களுக்காக அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து நிலையம் அயோத்தியில் அமைக்கப்படவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அயோத்தியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமர் கோவில் கட்டி முடித்தவுடன் தொலைதூர பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வர இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு அயோதியில் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.அங்கு ஏற்கனவே இருக்கும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையம் விரிவாக்கத் திட்டத்திற்கு மாநில கலாச்சாரத்துறை வசமுள்ள 9 ஏக்கர் நிலம் போக்குவரத்து துறையிடம் வழங்கப்பட்டு அங்கு ₹ 400 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பேருந்து நிலையம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து வாரணாசிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.