தமிழகத்திற்கு இதுவரை 5674 MT மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் செய்து இந்திய ரயில்வே சாதனை!

Update: 2021-06-20 01:45 GMT

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக இருந்த போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மத்திய அரசு தனது போர்கால நடவடிக்கையின் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் வினியோகம் செய்தது. நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகமாக இருந்த போதிலும் அவற்றை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் மூலம் அனைத்து மாநிலத்திற்கும் சரியான நேரத்தில் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டது. இதில் இந்திய ரயில்வேயின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது.

மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை கொண்டு செல்வதில் இருந்த சிக்கல்களை இந்திய ரயில்வே எளிதாக்கியது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் பல்வேறு பகுதிகளுக்கு இதுவரை 32,095 மெட்ரிக் டன்(MT) ஆக்ஸிஜனை, 1834க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதுவரை 444 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் பயணித்து ஆக்சிஜன் விநியோகித்து உள்ளன.

குறிப்பாக தென் மாநிலங்களுக்கு இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் 17,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இதுவரை தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களுக்கு முறையே 3200, 4000, 4200, 5600 மெட்ரிக் டன்னுக்கும் அளவிலான ஆக்ஸிஜனை விநியோகம் செய்துள்ளது. தற்போது கூட மூன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 14 டேங்கர்களுடன், 258 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

தற்போது வரை இந்திய ரயில்வே மூலம் தமிழகத்திற்கு 5674 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் தமிழகத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் மத்திய அரசு மருத்துவ ஆக்சிஜனை விநியோகம் செய்துள்ளது.

Similar News