ஜம்மு காஷ்மீரில் திருப்பதி - 62 ஏக்கர் நிலம் ஒதுக்கிய ஜம்மு!

Update: 2021-04-05 12:53 GMT

ஜம்மு-காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டுவதற்காக 62.02 ஏக்கர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் நிர்வாக கவுன்சில் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அமர்நாத், வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அடுத்தபடியாக மிக அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறும் என்று ஆந்திர அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


ஜம்மு-காஷ்மீரின் நிர்வாக கவுன்சில் கூட்டம் அதன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்முவில் உள்ள ம‌ஜீன் என்ற கிராமத்தில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டுவதற்காக 62.02 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இங்கு திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டி கொள்வதற்கும் அதன் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கோவிலுடன் வேத பாடசாலை, பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், தியான மையங்கள், குடியிருப்பு வளாகங்கள், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடங்கள் ஆகியவற்றை அமைத்து நாற்பது ஆண்டுகள் பயன்படுத்தி கொள்வதற்கான குத்தகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இந்த வளாகத்தில் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஆன்மிக சுற்றுலா பிரபலமாகும். மேலும் பொருளாதார ரீதியாக இப்பகுதி மேம்படும் என்று ஆந்திரா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானம் கோவில் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி உள்ளதால் அங்குள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News