காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர்: முதல்வருக்கு 9 கேள்விகளை முன்வைத்த பா.ஜ.க மாநில தலைவர்!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஒன்பது கேள்விகளை முன் வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கங்களில் கூறும் போது, "பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" திரு. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.
1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?