கொரோனாவிற்கு புதிய மருந்தை கண்டுபிடித்த DRDO - ஆக்சிஜன் தேவையை குறைக்கும், உயிரிழப்பை தடுக்கும்!

Update: 2021-05-08 12:01 GMT

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு ஆராய்ச்சி பிரிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம்(INMAS) மற்றும் ஹைதராபாத் டாக்டர் ரெட்டி ஆய்வகமும் இணைந்து உருவாக்கிய 2-deoxy-D-glucose (2-டிஜி) மருந்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதால் கொரோனா இறப்பை வெகுவாக கட்டுப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது.




இந்த சோதனை மூலக்கூறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது என்றும் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது என்பதும் மருத்துவ சோதனை முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2-டி.ஜி மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளுக்கு RT-PCR சோதனையில் நெகட்டிவ் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மருந்து நல்ல பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்று நோய்க்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதையடுத்து டிஆர்டிஓ நிறுவனம்‌ தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு மருந்து நிறுவனங்களுடன் இணைந்து அவர்கள் செய்த முயற்சியின் பலனாக முதற்கட்ட ஆய்வில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது கட்ட ஆய்விற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையர் (DCGI) தலைமையிலான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. மேலும் அடுத்தடுத்த நல்ல முடிவுகளை கொடுத்த இந்த மருந்து மூன்றாவது கட்ட பரிசோதனையையும் வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இந்த மருந்து மூலம் பரிசோதனை செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைத்ததன் காரணமாக மே 01, 2021 அன்று கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு மிதமான முறையில் துணை சிகிச்சையாக இந்த மருந்தை அவசரகால பயன்பாட்டிற்கு DCGI அனுமதி வழங்கியது. குளுக்கோஸின் பொதுவான மூலக்கூறு என்பதால் இதை எளிதில் உற்பத்தி செய்து நாட்டில் ஏராளமாக கிடைக்கச் செய்யலாம்.

இந்த மருந்து பவுடர் வடிவில் வருகிறது இதனை தண்ணீரில் கரைத்து வாய்வழியாக கொடுக்கப்படுகிறது. இது வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. தற்போது இந்தியாவில்

இரண்டாவது அலையில், ஏராளமான நோயாளிகள் கடுமையாக ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் வல்லமை வாய்ந்தது என்று தெரியவருகிறது. இந்த மருந்து நோயாளிகளுக்கு அளிப்பதன் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை வெகுவாக குறைப்பதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Similar News