பயன்பாட்டிற்கு வந்த DRDO தயாரித்த '2டிஜி' மருந்து-தொடக்கி வைத்த மத்திய அமைச்சர்!

Update: 2021-05-17 08:15 GMT

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக DRDO தயாரித்துள்ள பவுடர் வடிவிலான '2டிஜி' மருந்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று துவக்கி வைத்தனர்.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆக்சிஜன் தயார்செய்து அந்தந்த மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று மிதமானது முதல் தீவிரமான பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பவுடர் வடிவிலான '2டிஜி' என்ற தடுப்பு மருந்தை டிஆர்டிஓ தயாரித்துள்ளது.

இந்த மருந்தின் பயன்பாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட போது அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகள் கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு பவுடர் வடிவிலான மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தக் கொடிய நோய் தொற்றினால் இறப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News