கொரோனா நிவாரண பொருட்கள் இறக்குமதி, கருப்பு பூஞ்சை மருந்துக்கு GST விலக்கு!
கொரோனா நிவாரண பொருட்கள் இறக்குமதி மற்றும் கருப்பு பூஞ்சை தொற்றுக்காக பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
43 வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்திற்கு பிறகு காணொளி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் இன்று நடைபெற்ற விரிவான கூட்டத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார். இதில் முக்கிய முடிவாக கொரோனா நோய் தொடர்பாக நிவாரண பொருட்கள் இறக்குமதிக்கு மாநிலங்களின் பரிந்துரையின் பேரில் ஜிஎஸ்டி லிருந்து ஆகஸ்ட் 31, 2021 வரை வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் விலை குறைப்பது பற்றி முடிவெடுக்க அமைச்சர்கள் கூட்டம் நாளை கூட்டப்பட உள்ளதாகவும் இந்தக் குழு ஜூன் 9ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும் என்று தெரிவித்தார்.
கொரோனா நிவாரண பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.