கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த NGO - நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு.!
தமிழக தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதனை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணத்துவ உறுப்பினர் பதவியில் நியமிக்கப்படுவதை எதிர்த்து 'சுற்றுச்சூழல் ஆர்வலர்' சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கிரிஜா வைத்தியநாதனுக்கு போதுமான தகுதிகள் உள்ளன என்று கூறி அவரது நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது.
பூவுலகின்நண்பர்கள் என்ற 'தன்னார்வ' அமைப்பை நடத்தி வரும் 'சுற்றுச்சூழல் ஆர்வலர்' சுந்தர்ராஜன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு போதுமான தகுதிகள் இல்லை என்றும், எனவே தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அவரை நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கக் கூடாது என்றும் கோரி 'பொதுநல' மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் போதுமான தகுதிகள் இல்லாதவர்களை இத்தகைய பதவிகளில் அமர்த்துவது தவறான செயல்பாடு என்று விமர்சித்து, அவரது நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. வழக்கு விசாரணையின் போது கிரிஜா வைத்தியநாதனின் வழக்கறிஞர் அவர் சுற்றுச்சூழல் துறை செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதிப்புகள் சார்ந்த துறைகளில் குறிப்பிடத்தக்க காலம் பணியாற்றியதை எடுத்துக் கூறியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு போதுமான தகுதிகள் இருப்பதாகக் கூறி இடைக்காலத் தடையை நீக்கியது.
இந்த பதவியில் நியமிக்கப்படுவார்கள் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் பணியாற்றியது உட்பட 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கிரிஜா வைத்தியநாதனுக்கு இந்தத் தகுதிகள் இல்லை என்றும் கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மனுத் தாக்கல் செய்திருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நியூட்ரினோ ஆய்வகம் போன்ற அறிவியல் ஆய்வுத் திட்டங்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.