கொரோனாவிற்கு எதிராக மூன்றாவது தடுப்பூசி 'Sputnik-V' - மத்திய அரசு அனுமதி!

Update: 2021-04-12 11:49 GMT

கொரோனாவிற்கு எதிராக ரஷ்யா உருவாக்கிய ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்குப் பிறகு இந்தியாவில் ஒப்புதல் பெறும் மூன்றாவது தடுப்பூசி இதுவாகும்.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் Sputnik-V தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியது. தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியாக Sputnik-V என்ற தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ குழு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. மருத்துவ குழு சார்பாக இந்த தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகள் கேட்கப்பட்டது. மேலும் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இவை அனைத்தும் மருத்துவ குழு சார்பாக பரிசோதிக்கப்பட்ட பின்னர் இன்று ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் ஐந்து புதிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

இந்த ரஷ்ய தடுப்பூசி 91.6% செயல்திறனைக் கொண்டுள்ளது என்றும் அதன் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, வெனிசுலா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் நடத்தியதாகவும் ஸ்பூட்னிக்-வி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

Similar News