ஊரடங்கில் சாதிக்கும் மத்திய அரசின் பொது சேவை மையங்கள் - சிறப்பு பார்வை!

ஊரடங்கில் சாதிக்கும் மத்திய அரசின் பொது சேவை மையங்கள் - சிறப்பு பார்வை!

Update: 2020-04-18 04:50 GMT

சீன வைரஸ் கிருமியான தீநுண்மி (கொரோனா) பரவலை தடுக்க அறிவித்துள்ள ஊரடங்கில் மத்திய அரசின் பொது சேவை மையங்கள் சிறப்பாக பணியாற்றி சாதித்து வருகிறது.

பொது சேவை மையங்களுக்கு கிராம அளவிலான தொழில் முனைவோர் மூலம் சேவைகள் அளித்து வந்த நிலையில் 2015 ஜூலை 1 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பல தரப்பட்ட சேவைகள் திட்டங்கள் பொது சேவை மையங்கள் வாயிலாக செயல்படுத்த துவங்கியது. தற்போது நாடு முழுக்க 3.7 லட்சம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆதார் அடையாள அட்டை நகல் எடுப்பது, கடவு சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பித்தல், பான் கார்டு விண்ணப்பித்தல், வாக்காளர் அடையாள அட்டை பணி போன்றவைகளும் மொபைல் ரீ சார்ஜ், ரயில் டிக்கெட் பதிவு, ஆம்னி பேருந்து டிக்கெட் பதிவு, தங்குமிட பதிவு (ரூம் புக்கிங்), டிஷ் ரீ சார்ஜ் போன்ற சேவைகள் உள்ளன.

மேலும் மத்திய அரசின் ஜீவன் பிரமான் என்ற ஓய்வூதியதாரர் இருப்பை உறுதி செய்யும் திட்டம் 2014 நவம்பர் 14 முதலும் பயிர் காப்பீடு திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமான ஷராம் யோகி மான் தாண் 15 பிப்ரவரி 2019 முதலும் பொது சேவை மையங்கள் வாயிலாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசின் திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் பொது சேவை மையங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஆதார் அட்டை மூலமான பரிவர்த்தனை திட்டம் (Aadhaar Enabled Payment Service - AEPS) வாயிலாக இதன் வங்கி சேவைகள் புதிய உச்சத்தை அடைந்து உள்ளன. இந்த மாதத்தில் முதல் 14 நாட்களில் மட்டும் நாடு முழுக்க வங்கி சேவை அளிக்கும் 15043 பொது சேவை மையங்கள் வாயிலாக 54.64 பரிவர்த்தனைகளில் 1088 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. குறிப்பாக 9.04 பரிவர்த்தனைகளில் 145 கோடி ரூபாய் வங்கி வாடிக்கையாளர் கையில் பணமாக அளிக்கப்பட்டுள்ளது. டிஜி பே (digi pay) மூலமாக நாள் ஒன்றிற்கு 1.3 லட்ச பரிவர்த்தனைகளில் 9 கோடி ரூபாய் பணம் அளிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று பொது சேவை மையங்களுக்கான தலைமை செயல் அதிகாரி தினேஷ் தியாகி தெரிவித்தார்.

அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவம் ஆலோசனைகள் அப்பல்லோ, டாக் ஓ பி டி (DocOPD), ஆப்டிமஸ், வெல்கம் கீயூர் மருத்துவர்களை கொண்டு பொது சேவை மையங்களில் காணொளி காட்சி தொலைமருத்துவம் (Telemedicine) மூலமாக ₹1 கட்டணத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை வழங்கி வருகிறது இதன் மூலம் தற்போது நாள் ஒன்றிற்கு 1200 பேர் மருத்துவ சேவை பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவங்கள் அரசு மருத்துவர்களை கொண்டு தொலைமருத்துவத்தில் பொது சேவை மையங்களில் இலவசமாக ஆலோசனைகள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பொது சேவை மையங்கள் நடத்தும் கிராம அளவிலான தொழில் முனைவோருக்கு ஊரடங்கில் இணைய பாதுகாப்பு (Cybersecurity), தொலைசேவை மையங்களுக்கான தொழில் முனைவோர் (Telecenter Entrepreneur Course) ஆகிய இரண்டு பாடங்கள் இணைய தளம் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதுள்ளது.

கொரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிவமைக்கப்பட்ட ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்த 5 கோடி பேர்களில் பொது சேவை மையங்கள் வாயிலாக 1.92 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறாக பல்வேறு சேவைகளில் மூலம் மத்திய அரசின் பொது சேவை மையங்கள் ஊரடங்கில் சாதித்து வருகிறது.

Similar News