"நான் உடன்பிறப்பு பேசுகிறேன்" - தலைமைக்கு தி.மு.க தொண்டனின் திறந்த மடல்!

"நான் உடன்பிறப்பு பேசுகிறேன்" - தலைமைக்கு தி.மு.க தொண்டனின் திறந்த மடல்!

Update: 2020-06-17 05:34 GMT

நான் உடன்பிறப்பு பேசுகிறேன். ஆம் நான்தான் உங்களால் உ.பி என அழைக்கப்படும் மன்னிக்கவும் கிண்டல் செய்யப்படும் உடன்பிறப்பு பேசுகிறேன்.

அரசியலில் ஈடுபட கொள்கை, நோக்கம், சமுதாய முன்னேற்ற நல் எண்ணம், அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்ற நினைப்பு இப்படி ஏதும் இல்லாமல் பேச்சை வைத்து வளர்ந்த கட்சியில் அதே பேச்சை கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தது மட்டுமல்லாமல் என்னை இணைத்துக்கொண்டேன். இன்று உங்களால் உ.பி என அழைக்கப்படும் உடன்பிறப்பு.

கலைஞரால் "அன்பு உடன்பிறப்பே" என்று அழைக்கப்பட்டதால் இன்று நீங்கள் அவ்வாறு என்னை சுட்டிக்காட்டி அழைக்கிறீர்கள், நானும் அவ்விதமே கலைஞரின் உடன்பிறப்பாக எண்ணி சுற்றி வந்தேன், கட்சியை வளர்த்தேன். ஆனால் போக, போக தான் தெரிந்தது "உடன் பிறப்பே" என்று அழைத்தது, சன் குடும்பம் பிழைத்து வாழ உடனே பிறக்காமல் வந்து உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் உடன்பிறப்பென தாமதமாகதான் புரிந்தது.

கலைஞரால் ஈர்க்கப்பட்டு கட்சியில் ஐக்கியமாகி பம்பரமென சுழன்று கட்சியை வீதி, வீதியாக கொண்டு சேர்த்து வளர்த்து விட்டோம். ஆனால் இன்றுதான் புரிகிறது வளர்ந்து நிற்பது கட்சியல்ல கலைஞர் குடும்பம் மட்டுமே என்பது. தாமதமாக புரிந்து என்ன பயன்? கலைஞர் முதல்வராக இருக்கும் பொழுது சம்பாதித்த பெயர், பணம், பொருள் எல்லாம் கடந்த 10 வருடங்களில் கரைந்து ஓடின.

உ.பி என சர்வசாதரணமாக கிண்டல் செய்பவர்களே உங்களை ஒன்று கேட்கிறேன் "உங்களால் உடன்பிறப்பாக ஒருநாள் வாழ்ந்து காட்ட முடியுமா?"

எந்த வருமானமும் இல்லாமல் பத்து வருடமாக செலவு மட்டுமே செய்து உள்ளே மெழுகுவர்த்தியாகவும், வெளியே சர்க்கரவர்த்தியாகவும் வாழ்ந்து நொந்து கொண்டிருப்பது எவ்வளவு ரணம் தெரியுமா? கேலி செய்பவர்களே?

"கட்சியில் பதவி என்பது காசு உள்ளவனுக்கே, தேர்தலில் சீட்டு எனபது அந்த காசை தண்ணீராக இறைப்பவனுக்கே" என்று எழுதப்படாத தி.மு.க விதி ஆகிவிட்ட பிறகு வெறும் உழைப்பை வைத்து நான் என்ன செய்ய? கரைவேட்டி சட்டை சலவை செலவிற்க்கே அது சரியாக போய்விடுகிறது.

கலைஞரின் பாசறையில் அரசியல் பழகிய நாங்கள் இன்று ஏதோ பீகாரியின் யுக்தியை பின்பற்ற வேண்டுமாம் "ஐயகோ கலைஞரின் தொண்டனுக்கா இந்த சோதனை? என குமுறும் போது பக்கத்தில் இருப்பவன் 'அந்த பீகாரிய கொண்டு வந்ததே உன் கலைஞர் பையன் தான் போவியா?' என பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு போகிறான். பாவம் தெளிந்தவன் போலிருக்கிறது, எனக்குதான் இன்னும் தெளியவில்லையோ?"

ஒரு காலத்தில் பிராமணன் வேடமிட்டவனை மேடையில் வைத்து பூனூலை இழுத்து விளையாடிய நாங்கள் இன்று அதே பிராமணன் வேடமிட்டவனை மேடையில் வைத்து உதவி செய்வது போல் நாடகமாட வேண்டியுள்ளது! பார்த்தீர்களா காலத்தின் கோலத்தை?

நான் கட்சி பணியை ஆரம்பித்த நேரத்தில் பிறந்த குழந்தையை "எங்களின் எதிர்காலமே" என என் செலவிலேயே போஸ்டர் அடிக்க சொல்வதை எண்ணி பல ராத்திரிகள் தூக்கத்தை தொலைத்துள்ளேன்.

இது போதாதென்று தினமும் ராசிபலன் மாதிரி செய்திகளை பார்த்தால் "தி.மு.க தொண்டன் திருடினார், ஒட்டலில் ஓசி கேட்டு ரகளை, கடப்பா கல்லை தூக்கி ஓட்டம் பிடித்தார்" என செய்திகள், "பாவம் பத்து வருடமாக செலவு செய்து தாக்குப்பிடிக்க அவன் என்ன சன் குடும்பமா?" என்று பாவப்பட தோன்றுகிறது! விரைவில் எங்கே எனக்கும் இந்த நிலை வருமோ என அஞ்சுகிறேன்.

ஆகவே மக்களே நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான், "பத்து ஆண்டுகளாக செலவு மட்டுமே செய்துள்ளோம், வருமானம் இல்லை, நிறைய கேலிக்கு உள்ளாகினோம், அவமானங்கள் நிறைய, மனதில் இருப்பதை ஆண்டவனிடம் சொல்ல கோவிலுக்கு செல்வதை கூட மறைந்து செல்ல நிலை! நினைத்து பாருங்கள் பஞ்ச பூதங்களையும் வளைத்து, வளைத்து வஞ்சகமாக வைத்து சம்பாரித்தவர்கள் இதுபோன்று இருப்பது நியாயமா? முடிவை உங்களுக்கே விட்டுவிடுகிறேன். எங்களை வளமாக்க சம்பாதிக்க ஒரு வாய்ப்பு குடுங்கள்."

இப்படிக்கு உ.பி என உங்களால் கேலி செய்யப்படும் உடன்பிறப்பு.

Similar News