சீன பொருட்களுக்கு மாற்றாக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி - பட்டியல் தயாரிக்கும் மத்திய அரசின் அதிரடி முயற்சி.!

சீன பொருட்களுக்கு மாற்றாக நட்பு நாடுகளிலிருந்து இறக்குமதி - பட்டியல் தயாரிக்கும் மத்திய அரசின் அதிரடி முயற்சி.!

Update: 2020-06-29 02:53 GMT

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி அமைத்த கூடாரங்களை இந்திய வீரர்கள் நீக்கியபோது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த நிலையில் சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. அரசும் சீனாவுடனான தொடர்புகளைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கியமான, தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட இயலாத பொருட்களை வேறு எந்த நாடுகளிலிருந்து தருவிக்க முடியும் என்று மத்திய அரசு ஆய்வு செய்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய வர்த்தகத் துறையின் கீழ் வரும் தொழில்துறை மற்றும் சர்வதேச வர்த்தக மேம்பாட்டுக்கான அமைச்சகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த பொருள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவோ அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவோ உதவும் வகையில் ஒரு பட்டியலை தயாரித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்டியல் தயாரான உடன் அதிலுள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளை தொடர்பு கொள்வதோடு அவை இந்திய சந்தையில் எளிதாக நுழைய தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் அவ்வளவு விரைவாக உள்நாட்டில் தயாரிக்கும் வகையில் உடனடியாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாது என்பதால் மாற்று ஏற்பாடாக தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளிலிருந்து அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் முழுமையாக மேம்படுத்தப்படும் வரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக பிற நாடுகளிலிருந்து தற்போதைக்கு அத்தியாவசியமான ‌ பொருட்களை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு Free Trade Agreements எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்களை தவறான முறையில் பயன்படுத்தி சீனா இந்திய சந்தைகளை ஆக்கிரமிப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ஒரே மாதிரியான வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடனான இந்திய ஒப்பந்தங்களை இந்திய அதிகாரிகள் மறுஆய்வு செய்து வருகின்றனர்.

தெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA), ஆசியான், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உடனான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் சீன தயாரிப்பு பொருட்கள் இந்திய சந்தைகளை அடைய உதவி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தங்களில் ஏதாவது ஓட்டைகள் இருக்கின்றனவா என்று மத்திய அரசு கவனமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஒப்பந்தங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சீனா அதன் தயாரிப்புகளை இந்திய சந்தைகளில் இறக்குவதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, தென் கொரியா, வங்கதேசம், லாவோஸ் மற்றும் இலங்கை ஆகிய அனைத்து நாடுகளையும் நேரடியாக இணைக்கும் ஆசிய-பசிபிக் ஒப்பந்தத்தையும் மத்திய அரசு மறு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மலிவான சீனப் பொருட்கள் எந்த வகையிலும் இந்திய சந்தையில் இடம்பெற வழி இல்லாமல் போகும் என்று நம்பப்படுகிறது.

நன்றி : Opindia

Similar News