இந்தியா- நியூசிலாந்துக்கு இடையே ஆக்க பூர்வமான உணர்வு.. புதிய முன் முயற்சிகளுக்கான வாய்ப்பு..
இந்தியாவும், நியூசிலாந்தும் மருந்து, வேளாண்மை, உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்டவற்றில் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்க முன்வந்துள்ளன. மத்திய வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் தலைமையிலான தூதுக்குழு நியூசிலாந்தில் 2024 ஏப்ரலில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வமான மற்றும் விளைவு சார்ந்த கூட்டங்களை நடத்தியது. நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே, நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் தற்காலிக தலைமை நிர்வாகி மற்றும் செயலாளர் புரூக் பாரிங்டன், இந்தியா-நியூசிலாந்து வர்த்தக கவுன்சில், 11-வது இந்தியா-நியூசிலாந்து கூட்டு வர்த்தகக் குழு ஆகியவற்றுடன் இந்த சந்திப்புகள் நடத்தப்பட்டன.
இரு நாடுகளின் பொருளாதாரங்களிலும், பரஸ்பர வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரிக்க கணிசமான வாய்ப்புகள் இருப்பதை இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை மேம் படுத்துதல், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஒரு முக்கிய தருணத்தை உருவாக்குதல், மக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் வணிக தொடர்புகள் மூலம் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முக்கிய பகுதிகள் பற்றி இந்த சந்திப்புகள் கவனம் செலுத்தின.
சந்தை அணுகல் பிரச்சினைகள், பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் புதிய முன்முயற்சிகளுக்கான வாய்ப்புகளை இந்தக் கூட்டங்கள் ஆய்வு செய்தன. வலுவான இருதரப்பு பொருளாதார பேச்சுவார்த்தை கட்டமைப்பை நிறுவுவது, விவசாயம் போன்ற துறைகளில் பணிக் குழுக்களை உருவாக்குவது, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் போக்குவரத்து; வனவியல் மற்றும் மருந்துகள் முக்கிய வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு வழிவகை செய்தல் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். ஒட்டு மொத்தமாக, தற்போதுள்ள ஒத்துழைப்பை தொடர்ச்சியான உரையாடல் மூலம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது பொதுவான புரிதலாக அமைந்தது. எனவே, இரு தரப்பினரும் அனைத்து மட்டங்களிலும் வழக்கமான கூட்டங்களை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், கூட்டு மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் பணியாற்றவும் உறுதியளித்தனர்.
Input & Image courtesy: News