2 மாதங்களுக்கு ரேஷனில் இலவச உணவுப் பொருள்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Update: 2021-05-06 08:45 GMT

ஏழை குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய அரசு செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு ரேஷன் உணவு பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மே மற்றும் ஜூன் மாதம் ரேஷன் கடைகளில் இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 79.88 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் 80 லட்சம் டன் உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இவற்றை இலவசமாக வழங்குவதன் மூலமாக மத்திய அரசுக்கு சுமார் 25,332.92 கோடி ரூபாய் செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை குடும்பங்கள் பயன் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கொரோனா முதலாவது அலையின் போது பெண்களுக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோல் சிறு, குறு தொழில் செய்வோரும் பாதிக்கப்படாத வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News