2960 MT ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது- இந்திய ரயில்வே!

Update: 2021-05-08 01:00 GMT

இந்திய ரயில்வே மூலம் 2960 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 185 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை இந்திய ரயில்வே துரித நடவடிக்கையின் மூலம் மேற்கொண்டுள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலையில் ‌இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது. இந்திய ரயில்வே மூலம் இதுவரை 2960 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் 185 டேங்கர்களில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை 47 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கும் மாநிலத்திற்கு விரைவில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கையையும் இந்திய ரயில்வே செய்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், தில்லி, ஹரியானா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு இதுவரை தேவையான ஆக்சிஜனை இந்திய ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் கொண்டு சேர்த்துள்ளது.

அதேபோல் மேலும் 260 டன் மருத்துவ ஆக்ஸிஜன் 18 டேங்கர்களில் எடுத்துச் செல்லப்பட்டு டெல்லி, மகாராஷ்டிரா மற்று ஹரியானா மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. இன்று இரவு மேலும் அதிக அளவில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணங்களைத் தொடங்கவிருக்கின்றன என்று மத்திய அரசு தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் இடங்களில் ஆக்சிஜனை உடனடியாக கொண்டு செல்லும் நடவடிக்கையை மத்திய அரசு முழுவதுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நோய் தொற்று மேலும் மேலும் அதிகரித்து வருவது பின்னடைவாக கருதப்படுகிறது.

Similar News