முன்னும், பின்னும் கேமரா - பெண்களுக்கு ஆபத்து என்றால் ஓடோடி வரும் அம்மா ரோந்து வாகனம் - முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்!

முன்னும், பின்னும் கேமரா - பெண்களுக்கு ஆபத்து என்றால் ஓடோடி வரும் அம்மா ரோந்து வாகனம் - முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்!

Update: 2019-08-27 04:08 GMT

“பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு” என்ற திட்டத்திற்காக டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 8 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 425 கோடி ரூபாய் சென்னைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து மகளிர் காவல் நிலைய ரோந்து பயன்பாட்டிற்காக அம்மா ரோந்து வாகனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.


ரூ.7.50 கோடி செலவில் 40 அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


அம்மா ரோந்து வாகனம்:


இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னை நகரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்படும்.


எப்படி அணுகுவது?


1091 என்ற இலவச போன் மூலம் தொடர்புகொண்டு பெண்களுக்கு எதிரான குற்ற தொடர்பான புகாரை கொடுக்கலாம். 1098 என்ற எண்ணில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த குற்றங்களுக்காக பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள அம்மா ரோந்து வாகனங்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த வாகனத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். பெண்கள், குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிந்தால் அருகில் உள்ளவர்கள்கூட புகார் அளிக்கலாம்


Similar News